அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்.

Published Date: February 8, 2025

CATEGORY: GENERAL

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை சார்பில் ஊடகத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில் நாம் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. மருத்துவ துறையிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது நோய்களை கண்டறிந்து சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில், இதை ஒழுங்குபடுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

ஏ.ஐ. மூலம் அனைத்து துறைகளிலும் தனித்துவமான வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. இந்த தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. பெரு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங், துறை தலைவர் டி.ஆர்.கோபாலகிருஷ்ணன், ரேண்டம் வாக் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆசிஷ் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Media: Hindu Tamil